Sunday 23 October 2011

வண்ணதாசனின் தொடக்ககாலக் கதைத் தொகுதிகள்
முனைவர். . மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி – 627 011.

1.    கலைக்க முடியாத ஒப்பனைகள் (1976)
    “அஃக்பரந்தாமனால் 1976 டிசம்பரிலே வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு வெளிவந்த வண்ணதாசனின் முதல் சிறுகதைத் தொகுதி இது. பள்ளியில் மாணவன் பிபின் எல்லோருக்கும் மிட்டாய் தந்துவிட்டு ஆசிரியர் தங்கம் பிள்ளை சார்வாளுக்குச் சாக்லேட் தராதபோது அவருக்கு ஏற்பட்ட நிலையே 'சபலம் கதை' +2 பாடத்திட்டத்தில் வைக்கப்பட்ட 'உல்லாசப் பயணம்', வடிகால் 'குஞ்சு', புளிப்புக்கனிகள் 'பிரபா', கல்யாண வீட்டிலும் 'காசாளர்' வேலை பார்த்ததை நினைவுபடுத்தும் 'கலைக்க முடியாத ஒப்பனைகள், 1974இல் 'இலக்கிய சிந்தனை' விருது பெற்றதனுமை”. குளிர்பான எச்சிப்பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டிருந்தவனை எச்சியைக் குடிக்காதே என்று கவுரவத்தோடு சொன்னமிச்சம் கதையும் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள்.  முதல் பிரசவம் செத்துப் பிழைப்பது போன்றது. முதல் தொகுப்பு வண்ணதாசனுக்கு முகவரி அளித்த உயிரோவியம்.
2.    தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் (1978)
    காலம் கடந்தவுடன், இருமல் மருந்துகள் வேண்டுமானால் காலாவதியாகலாம்.  இலக்கியம் ஒரு போதும் காலாவதியாவதில்லை.  1978ஆம் ஆண்டு விஜயா வேலாயுதம் வெளியிட்ட வண்ணதாசனின் இரண்டாம் தொகுதி.  பேருந்தில் அழுத குழந்தையை 'எங்க அம்மையில்லா' என்று அன்பின் வடிவமாய் சமாதானப்படுத்திய பெயர் தெரியாத மீசை பெரியவர், கணவனுக்காகப் போர்வை வாங்கிப் புறக்கணிப்புக்குள்ளான அரசு, நெருக்கடியான தன் அலுவலகத்தையே அமைதியாகக்கண்ட 'ஞாபகம்' கதைத் தலைவி, வெள்ளையடிக்க வந்தவனைப் பரிவுடன் பார்த்த நீலா, அலுவலகத்தில் சொர்க்கத்தை அனுபவித்த தாஸ், பக்கவாதம் வந்த மச்சானின் படத்தோடு தன் படத்தைச் சேர்த்து ஸ்டூடியோவில் வரையக் கண்ணீரோடு வந்த அந்தப் பெண். சரஸ்வதி பூஜைக்கு அம்மன் முகம் செய்து வேலைக்காகக் காத்திருந்த முருகேசன், பிலிம் துண்டுகளில் படம் பார்த்த செல்லமக்கா, மெலிந்த மனைவியைக் கண்டுகொள்ளாமல் குமுறிய கணவன், சினை ஆட்டின் மீது செங்கலை எறிவதைக்காணச் சகிக்காத புஜ்ஜி என்று நிறையப் பூக்கள் வண்ணதாசனின் இத் தோட்டத்தில் உண்டு.
3.    சமவெளி (1983)
    யாராலும் பதிவு செய்யப்படாத பாத்திரங்களை அழுத்தமாக இம்மூன்றாம் தொகுதியில் வண்ணதாசன் துணிந்து படைத்துள்ளார்.  தேரோட்டம் பார்க்கத் துடிக்கிற கோமு (நிலை), கோட்டிக்காரி பொன்னம்மா (தாகமாய் இருக்கிறவர்கள்), அடுத்த கதையைப் படிக்க விடாமல் மனதில் உறுத்தும் பக்கா, குஞ்சு (வருகை), 'இந்த இடத்தில் வாழக்கையை ஆரம்பித்தால்கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்', என்று நினைத்த ஓவியன் (சமவெளி), 'சின்னு முதல் சின்னுவரை' நீள் கதைக்கு முன்பாகவே, 30 பக்கங்களில் லாட்ஜ் நிகழ்வுகளில் சிவனைப் பொருத்தி எழுதிய 'வரும்போகும்' என்ற நீள் கதை, அசுத்தம் செய்த பூனையை விரட்ட பூனையை விட அறையை அதிகமாக அசிங்கம் செய்தவனின் 'பூனைகள்' கதை, போன்ற அருமையான கதைகள். வயோதிகத்தின் காரணமாகக் காது கேட்காத தாத்தாவை உடல் மொழியால் பேசிக் சமாதானப்படுத்தியகூறல்' கதை, மரத்தை மனிதனை விட உயரமாக உயர்த்தியவெளியேற்றம்கதை. பூ விற்றவனைப் பற்றிப் பேசிய 'உதிரி' கதை போன்ற அருமையான கதைகள் இத்தொகுதியில் உண்டு.
4.    பெயர் தெரியாமல் ஒரு பறவை (1985)
    வண்ணதாசன் கதைகளில் முத்திரை பதித்த 'பெயர் தெரியாமல் ஒரு பறவை' அவரது நான்காம் தொகுதி.  அவருடைய அகராதியில் அஃறிணை என்பது உயர்திணையே என நிருப்பித்த தொகுதி பெயர் தெரியாமல் நிலக்கோட்டை அறைவாசலில் கிடந்த ஏதோ ஒரு பறவை, மனக்குப்பைகளைக்கூட்ட வந்த சிலம்பாயி (வேறு வேறு அணில்கள்), அன்பின் சிநேகிதனாய் வைத்தியலிங்க சித்தப்பா (ஆறுதல்), ஷிபா மருத்துவமனையில் படுக்கையிலிருந்த மனிதரின் மனநிலைகாட்டிய 'கடைசியாகத் தெரிந்தவர்' கதை.  குழந்தையின் கழுத்தில் போட்ட சங்கிலி காலில் போட்டதாய் மாறிய 'சங்கிலி' கதை, குழந்தைகளிடம் எரிந்து விழுந்த சென்பகம் (அந்தந்த தினங்கள்), புல்லாங்குழல் இசை வழிந்த 'திறப்பு', கதை 'கூறல்' கதையின் நீட்சியாய் இன்னொரு தாத்தாவோடு 'நிறை' கதை, அற்புதமான விருத்தா எனும் புகைப்படக் கலைஞனின் கதை (போய்க் கொண்டிருப்பவள்), சொந்த ஊரில் அடங்கத்துடித்த 'அடங்குதல்' கதை,
ஒர்க் ஷாப் பையன்களைப் பதிவு செய்த 'பட்டறைகள்' கதை, விலங்குகளைவிடக் கேவலமாய் நடத்தப்பட்ட பொன்னுலட்சுமியின் (மிதிபட) கதை என்று தமிழ்க்கதைகளை எண்பதுகளில் வண்ணதாசன் வேறு தளத்திற்கு நகர்த்தியது புலனாகிறது.
5.    மனுஷா மனுஷா (1990)
    தி. ஜானகிராமனுக்கு அடுத்து ஆண் பெண் உறவுநிலைகளை அழுத்தமாகக் சொன்ன கதை ஆசிரியராக வண்ணதாசனைச் சொல்லலாம்.  வளவுவீட்டில் எந்தப் பாலியல் நோக்கமுமில்லாமல் பிரமு அண்ணாச்சியின் மகளைக் கட்டிப் பிடித்து முத்தமிட்ட திருமணமான இளைஞன் (மனுஷா மனுஷா), தற்கொலை செய்து கொண்ட மலையப்பன் கதை (சிறுகச் சிறுக), 14 பக்கங்களைக் கொண்ட நீள் கதையாக இத்தொகுதியில் உள்ளது.  எழுத்தாளனின் கதையைச் சொன்ன 13 பக்கக்கதைசொல்ல முடிந்த கதை' 'பெருந்திணை' என்று சங்க இலக்கியம் பேசிய பொருந்தாக் காதலை முதுமைக் காதலை, சமுத்திரக்கனி நாடார் மூலம் புலப்படுத்தியஎன்றைக்கும் உள்ள வெயில் கதை’, வண்ணதாசனின் உயிர் உறவுப் படைப்பான சுந்தரத்துச்சின்னம்மையைத் தந்த 'சிறிது வெளிச்சம்' கதை, உயிர் உளசலாகிக் கிடந்த போது ஏதேனும் பாரத்தைத் தன் தலையில் கட்டி விடுவார்களோ என்று பயந்துப் பம்மிய சராசரி இளைஞனின் (கிளைகள் இலைகள்) கையறு நிலைக்கதை ஆண் பெண் உறவுநிலைகளை வைத்து ராஜீயைப் படைத்த 'அப்பால் ஆன' கதை.  சங்க இலக்கியப் பாடலை அடியொற்றி எழுதப்பட்ட 'செடிகளுக்கு' கதை.  மலேயாப் பெண்ணை வைத்து எழுதப்பட்ட 'மதில்மேல் சேவல்' கதை, கணவனுக்குத் தெருப் பெண்கள் தந்த மரியாதையை மனதிற்குள் ரசித்த ஈஸ்வரியின் (அவனுடைய நதி அவளுடைய ஓடை) கதை என்று இத்தொகுதி முழுக்க ஆண் பெண் உறவுகளை தி.ஜா. வைப்போல் புடம்போட்டு எழுதியுள்ளார்.
6.    கனிவு (1992)
எழுத்திலும் கனிவும் பக்குவமும் பதமும் வண்ணதாசனின் ஆறாவது தொகுதியில் தெரிகிறது.  நவாப்பழம் விற்கும் களக்காட்டு சாய்பு (பற்பசைக் குழாயும் நாவல் பழங்களும்), நீச்சல் பழகுகிறவனின் அன்புக்குரிய மகாதேவன் பிள்ளை (நீச்சல்), வயதான பாட்டியைக் கவனித்து வந்த தனலட்சுமியின் (விளிம்பில் நிற்கிறவர்கள்),  மண்ணை வைத்துக் கலைகள் புரிந்த ஆறுமுக வேளார் (நிழல்குதிரை), வண்ணதாசன் கதைகளில் கொடூரமாக ஆண்களால் தாக்கப்பட்ட கிட்டி போன்ற அப்பாவிப் பாத்திரங்கள், இகாரஸ், எனும் கிரேக்கத் தொன்மத்தை வைத்து எழுதிய 'சூரியன் அருகில் பறக்கிறவர்கள்' என்ற புகழ் பெற்ற கதை போன்ற கதைகள் இத்தொகுதியில் உள்ளன.

Friday 21 October 2011



எழுத்தாளர்கள் வாழும் காலத்தில் கொண்டாடப்பட
வேண்டும்” - வண்ணதாசன்
வண்ணதாசனுடன் நேர்காணல்

    அன்பு என்னும் ஒற்றைச் சொல்லையே தன் படைப்புக்களின் மூலம் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளாகச் சொல்லிவரும் தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர், கவிஞர் திரு. வண்ணதாசனுடன் 'மேலும்; அமைப்பினர் பேராசிரியர் சிவசு. முனைவர் கட்டளை கைலாசம், முனைவர் . மகாதேவன், முனைவர் வேலம்மாள் ஆகியோர் 'சிற்றேட்டிற்காக' அவருடைய பெருமாள்புரம் இல்லத்தில் நடத்திய நேர்காணல் பதிவு

தொகுப்பு : முனைவர் . மகாதேவன்

பேரா. சிவசு

சிறுவயதில் உங்களைப் பாதித்த புத்தகங்கள் பற்றிக் கூறுங்களேன்.  

    பதினேழு பதினெட்டு வயதில் அப்பாவின் அலமாரியில் இருந்த புத்தகங்கள் என்னை ஈர்த்தன.  'சோவியத் லிட்ரேச்சர்' என்ற ஒரு புத்தகம், 'சைனா ரீகன்ஸ்ட்ராக்ட்' எனும் தொடர்ந்து வாசித்திருக்கிறேன்.  இந்தியன் லிட்ரேச்சர் மாதாமாதம் வரும் சோவியத் லட்ரேச்சரின் நேர்த்தியான ஓவியங்கள், நேர்த்தியான அச்சாக்கம் ஆகியன என்னை வெகுவாக ஈர்த்தன.

கட்டளை கைலாசம்

உங்களைத் தொடக்க காலத்தில் பாதித்தவர்கள் யார்?

    வல்லிக்கண்ணன் அப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் என்னை ஈர்த்திருக்கின்றன.  மற்றபடி வல்லிக்கண்ணன் எழுத்துக்கள் என்னை அதிகமாகப் பாதித்தது இல்லை.  தீபம் நா. பார்த்தசாரதி தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தினார்.  என்னை ரொம்பப் பாதித்தது ஜெயகாந்தன் ஜெயகாந்தனோடு பேசிக் கொண்டிருப்பதே சுகமான அனுபவம்.  குணங்குடியார் பற்றியும் அவரால் ஆழமாகப் பேச முடியும், நவீன இலக்கியத்தையும் அவரால் மிக ஆழமாக அலச முடியும்.  நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் போதே எல்லாவற்றையும் கடந்து எங்கோ பயணித்தபடி பேசிக் கொண்டிருப்பார்.  தி. ஜானகிராமனின் எழுத்துக்கள் என்னைப் பாதித்தன.  அவருடைய மோகமுள் கூட என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  'செம்பருத்தி' ஏற்படுத்திய  தாக்கம் அதிகம்.  'இதற்குத்தானே ஆசைப்பட்டாய்' என்று மோகமுள் ஜமுனா பேசும் போது தி. ஜானகிராமனின் நடை என்னை ஈர்த்தது.  என்னுடைய தொடக்ககால எழுத்துக்களில் அசோகமித்திரனின் நடைச்சாயல் உண்டு என்று சொல்பவர்களும் உண்டு.

    ஒரு காலம் வரைதான் பாதிப்பு எல்லாமே.. அதன்பிறகு எனக்கென்று ஒரு நடையும் கதைப் போக்கும் உருவாகிவிட்டது.

. மகாதேவன்

இன்றைய சிறுபத்திரிகைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?  

    குழுமனப்பான்மையும் வணிக நோக்கமும் பெருகிவிட்டது.  அவரவர்கென்று நினைத்ததையெல்லாம் அச்சாக்குகிறார்கள்.  அவற்றில் வருகிற சமீபத்திய கவிதைகளை எல்லாம் பார்க்கும்போது கவிதைகள் வாசிப்பதையே நிறுத்திவிடலாமா என்று தோன்றுகிறது.

வேலம்மாள்

    இன்றைய பெண்ணிய எழுத்தாளர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    அம்பை என்ற லட்சுமி எழுதிய எழுத்துக்கள் பெண்ணிய எழுத்துக்கள் இல்லையா? முப்பது வருடங்களுக்கு முன்பே பெண்ணிய எழுத்துக்களைத் தந்த அம்பையின் எழுத்துக்களை நாம் ஏன் பேசுவதில்லை.  சல்மாவின் ஜாமங்களின் கதை அருமையான படைப்பு, அதன் பின் என்னவாயிற்று அவ்வெழுத்துக்கள்.  பெண்ணிய எழுத்தாளர்களென்று ஒரு சில பெயர்களை நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம், அவர்களின் முதல் படைப்புக்களில் இருந்த தகிப்பு அதற்கடுத்து வந்த படைப்புக்களில் ஏன் இல்லாமல் போனது?  எதையும் வலிந்து எழுதாமல் இயல்பாக எழுதிய அம்பையின் எழுத்துக்களை நான் மிகச் சிறந்த பெண்ணிய எழுத்தாகப் பார்க்கிறேன்.



. மகாதேவன்

தமிழின் எந்த இலக்கிய வடிவத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்?

    எல்லா வடிவங்களையும் விட நாவல் வடிவத்தின் மீதே நான் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.  புதிய முயற்சிளோடு தங்களின் வாழ்வைச் சொல்ல எத்தனை அற்புதமான நாவலாசிரியர்கள் தமிழுக்கு வந்திருக்கிறார்கள்.

    ஜோ.டி. குருஸின் 'ஆழிசூழ் உலகு' வெங்கசேனின் 'காவற் கோட்டம்' என்ன அற்புதமான நாவல்கள்.  இஸ்லாமிய வாழ்வியலை மிக அற்புதமாகச் சொல்லும் கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'மீன்காரத் தெரு' மிக அருமையாக வந்திருக்கிறது.  சிறுகதைகளில் சொல்லிக் கொள்ளும் படியாகச் சோதனை முயற்சிகள் நடைபெறுவதில்லை.  கவிதை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்.  சோதனை முயற்சிகளோடு தமிழ் நாவல் இலக்கியம் அதிக நம்பிக்கை தருகிறது.

கட்டளை கைலாசம்

இளைய எழுத்தாளர்களுக்கு எவ்வகையில் வழி காட்டுகிறீர்கள்?

    யாரும் வழிகாட்ட வேண்டாத அளவுக்கு அவர்கள் எல்லோரையும் விடத் தெளிவாக இருக்கிறார்கள்.

சிவசு

புதிய உரைநடைப் போக்கை உங்களின் 'அகம்புறம்' நூல் தமிழில் முன் வைத்திருக்கிறதா?

    சிறுகதைக்கும் கவிதைக்குமிடையிலமைந்த ஒரு நடையில் 'அகம் புறம்' தொடரை ஆனந்த விகடனில் எழுதினேன்.  அந்த வெகுசன ஊடகத்தில் நான் எழுதிய எழுத்து அதிகமான வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறது.

ஆறாம் வகுப்புப் பயின்ற போது,     நடைபெற்ற நிகழ்வுகளைக் கூட அதில் உரைநடைச் சித்திரமாக்கியுள்ளீர்களே நினைவாற்றல் உங்கள் பலமா? அப்படியெல்லாம் இல்லை.  ஒரு சம்பவம் நடைபெறும் போது அதை மனதில் பதிவு செய்து கொள்கிறேன்.  தேவையான நேரத்தில் சரியான வடிவத்தில் என் மொழிநடையில் பதிவு செய்கிறேன்.  

கட்டளை

    தாமிரபரணி நதி சார்ந்து நிறைய எழுதுகறீர்கள்.  அந்நதி சுற்றுச்சூழல் சீர் கேட்டினால் மாசடைதல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    தாமிரபரணி மாசுறுதல் குறித்து எழுத்தாளன் மட்டுமே அக்கரை செலுத்த வேண்டும் என்பது சரியல்ல.  வாழும் அனைத்து மக்களோடும் தொடர்புடையது அது.  நதியைக் காக்க எல்லோரும் முயல வேண்டும்.  கங்கை கொண்டானில் பன்னாட்டு நிறுவனம் ஆலை நிறுவிய போது, எஸ்.எப்.., அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே பேருந்து பேருந்தாக ஏறித் துண்டுப் பிரசுரம் தந்தார்களே! வேறு யார் என்ன செய்தார்கள்.

சிவசு

    உங்கள் எழுத்துக்கள் சமுகத்தின் நல்லவற்றையே பார்க்கின்றன.  வாழ்வில் மோசமாக ஏதும் நடக்க வில்லையா?

    அல்லவை விலக்கி நல்லவற்றை எழுதுவதை எழுத்து அறமாகக் கருதுகிறேன்.  என்னைப் பாதிக்கும் சம்பவங்களில் எதை நான் எழுத வேண்டும் என்று நினைக்கிறேனோ அதையே நான் படைப்பாகத் தருகிறேன்.

மகாதேவன்

    'இகாரஸ்' எனும் கிரேக்க தொன்மத்தைப் பயன்படுத்திச் சூரியன் அருகில் பறக்கிறவர்கள்' எனும் நல்ல கதையைத் தந்தீர்களே.  அக்கதை குறித்துக் கூறுங்களேன்.

    தூத்துக்குடி ..சி. கல்லூரி விடுதியில் நடைபெற்ற சம்பவத்தைக் கிரேக்கத் தொன்மமான 'இகாரசுடன்' தொடர்பு படுத்திச் சூரியனுக்கு அருகில் பறக்க ஆசைப் பட்டவன் கதை குறித்து எழுதினேன்.  உங்கள் ஆய்வேட்டில் அது நல்ல கதை என்று எழுதியிருந்தீர்கள்.

கட்டளை

    பங்கேற்காத அனுபவத்தைக் கதையாக எழுதியுள்ளீர்களா?

இல்லை.  கடந்த ஐம்பது ஆண்டுகளாக அந்தந்த கால கட்டத்தில் என் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளே என் கதைகள்.

வேலம்மாள்

    உங்கள் கதைகளில் குடும்பம் என்ற ஒன்றே திரும்ப வருகிறது.  சமுதாயச் சிக்கல்களை நீங்கள் ஏன் எழுதுவதில்லை?

    நான் வாழ்ந்த சூழ்நிலை குடும்பம் சார்ந்தது.  என் ஆச்சி பாப்பாத்தியம்மாளின் இடத்தை இன்றும் அவரே நிறைவு செய்கிறார்.  என் ஆச்சி தாத்தாவிடம் பெற்ற அன்பு, திருமணமான பின் என் மனைவி வீட்டார் என் மீது செலுத்திய அன்பு இவை எல்லாம் என்னைக் குடும்பம் சார்ந்து அன்பு சார்ந்து, எழுத வைத்திருக்கலாம்.  வங்கியில் வேலை பார்க்காமல், தாலுகா அலுவலகத்தில் நான் வேலை பார்த்திருந்தால் பல சிக்கல்களைச் சந்தித்திருக்கலாம்.  சமுதாயச் சிக்கல்களை நான் பதிவு செய்யவில்லை என்று கூற இயலாது.  சக மனிதர்களால் ஆனதுதானே சமுதாயம்.  சக மனிதர்களை அன்பு செலுத்துபவன் சமுதாயத்தை அன்பு செலுத்துவதாகத் தானே அர்த்தம்.

    கல்வி வளாகங்களில் நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கேற்ற உங்கள் அனுபவம் குறித்து

    படைப்பாளியின் கதைகளை, ரு வரிகூட வாசிக்காமல் அவனை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிற மாணவர் கூட்டத்தில் பேசவேண்டி உள்ளது.  கல்வி வட்டாரத்திற்கு அப்பால் உள்ளவர்கள் நிறைய வாசிக்கிறார்கள்.  சமீபத்திலே ஈரோட்டிலே விருது வழங்கும் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.  என் கைகளைப் பிடித்தபடி என் கதைகளை அவர்கள் விவரித்துப் பேசிய போது நிறைவாக இருந்தது ஒரு படைப்பாளி கொண்டாடப்பட வேண்டும்.  அவனுடைய படைப்புக்களை வாசிக்க வேண்டும்.  அதைத்தான் ஒரு படைப்பாளியாக இச் சமூகத்திடம் எதிர் பார்க்கிறேன்.

    குறுந்தொகையைப் புதுக்கவிதை நடையில் தந்த வண்ணதாசனின் அண்ணன் திரு. கணபதி அவர்கள் காலமான ஒரு மாதத்திற்குள் நெகிழ்வான கனமான மனநிலையில், இறந்து போன அண்ணனின் நினைவுகளுடன் அவருடைய சட்டையை அணிந்தபடி உணர்ச்சிப் பெருக்காக திரு. வண்ணதாசன் நம் நேர்காணல் வினாக்களுக்குப் பதில் சொன்னார்.  நன்றி சொல்லிப் புறப்பட்டோம்.  கைகளைப் பிடித்தபடி வாசல்வரை வந்து அன்போடு வழியனுப்பினார்.  அன்புதானே வண்ணதாசன்.