Friday 4 November 2011

                       தினமணியின் அன்பு ஆசிரியர் 
            திரு.வைத்தியநாதன் அவர்களுக்கு


 



ஊருக்கு நல்லது சொல்லும்
உத்தமருக்கு அன்பின் வணக்கம்.
பிடிக்காத அலைவரிசைகளைப்
பிடிவாதமாய் நகர்த்துகிற
ரிமோட்களைப் போல் எல்லோரும்
நமக்கென்ன என்று நகரும்போது
சமுதாய வியாதிகளுக்கு
வைத்தியம் பார்க்கக் கூடியன
உங்கள் தலையங்கங்கள்

கண்ணாடித் தொட்டிகளின்
செவ்வகச் சுவர்களில்
முட்டிமோதிவிட்டு
அலைகிறவேடிக்கை மனிதர்களுக்கிடையில்
உங்களைப் போன்ற ‘பாரதி வழித்தோன்றல்கள்
அவசியம்!

சுருக்கமாகச் சொல்வதும்
சுருக்கென்று தைக்கச் சொல்வதும்
உங்கள் தலையங்கங்களின் தனிச்சிறப்பு

நானறிந்த வகையில் வெளிநாடுகள் குறித்த நீங்கள்
எழுதியவற்றை விட உள்ளுர் விவகாரங்கள்
குறித்து எழுதியவை உயிர்த்துடிப்புள்ளவனாக
அமைந்திருக்கின்றன.

பனையோலைப் பெட்டிகளில் கொச்சக்கயிறு
பிடித்து தூக்கிப்போன உடன்குடிக் கருப்பட்டிகள்
உங்கள் உள்ளுர் விவகாரத் தலையங்கங்கள்

நியான் ஒளிரலில்
தள்ளுவண்டிகளில் பொருட்களை நிரப்பியபடி
உள்ளே பயணிக்கும் பேரங்காடிச்சாயல்
வெளிநாடு குறித்த தலையங்கங்கள்.

மண்பானைக் குளிர்ச்சியில்
சிரட்டைக் கரண்டியோடு
வழிந்த நல்லெண்ணை
இன்று பாலிதீன் பாதுகாப்போடு

தலை அங்கம் விட்டுப்போனாலும்
நான் துணிந்து எழுதுவேன்

என்று மதிதா பள்ளியிலிருந்து காசி கிளம்பிளவன் தானே முண்டாசுக் கவிஞன் பாரதி...

அப்துல் கலாமை அழைத்துவந்து நெல்லையிலே
‘ஊருக்கு நல்லது சொல்லியிருக்கலாம்
இங்கே உங்கள் தித்திப்பான தமிழ்ப் பிதாமகன் தி..சி. உள்ளாரே!

மண்டையோட்டை உடைத்தாலும்
மறுபேச்சு பேசாத மனிதர்களுக்கு மத்தியில்
கந்தக வரிகளோடு காகிதங்கள் வரத்தான்
வேண்டும்.

”பத்தாம் தசராக்களின்
இன்னமும் காளிகள்
மகிஷாசூரன்களோடு
மல்லுக்கு நிற்கத்தான்
வேண்டியிருக்கிறது
அவனும் மாய்ந்த பாடில்லை
அவளும் ஓய்ந்த பாடில்லை
என்ற வரிகளை நான் உங்களுக்காக எழுதுகிறேன்.

மார்க்கெட் கூறுகளில்
கவிழ்ந்து மறைத்து
விற்கப்படுகிற
கத்திரிக்காயின் லட்சணம்
அடுத்த நாள்
அடுப்பறையில் அவளிடம் அறுபடும் போதுதான்
தெரிகிறது”  

அடுத்த நாள் காலை தலையங்கங்கள் அதே பணியைச் செய்கின்றன.

    “வாயிருந்தால் வாய்ப்புஎன்று வாயை நம்பி அநீதிகள் கிளம்பும்போது நாம் கையை நம்பியல்ல.  உள்ளத்து மெய்மை நம்பி நாம் கிளம்பத்தான் வேண்டியிருக்கிறது.

சமுதாய நோய் நீக்கும்  தினமணிவைத்திய நாதன் அவர்களுக்கு மீண்டும் வசந்த வணக்கங்கள்.
    உங்கள் தலையங்கச் செய்திகள் பலவற்றை என் ‘மகாபரதி’ இணைய வலைப்பூவில் கவிதை யாக்கியிருக்கிறேன். 


                                                                     
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கைப்பேசி  : 09952140275
Email : nellaimaha74@gmail.com
WWW.MAHATAMIL.COM