Sunday 24 February 2013

விழி . . . எழு . . .


காலச்சக்கரம்



            தொடக்கமற்று முடிவுமற்று
            ஆச்சர்ய ஆரக்கால்களோடு
            வாழ்வுப் புள்ளியை மையமிட்டுச் சுழல்கிறது
            காலச்சக்கரம்.

            கிரகங்களினூடே உருண்டோடி
            சமுத்திர ஆழத்திலும் விழுந்தோடிச்
            சுக துக்கங்களை
            மானிடத்தில் மாட்டிவைத்துக்
            காலச்சக்கரம் காலம் கடந்து சுழல்கிறது
           
            கிளம்பிய இடமும்
            அடையும் இடமும்
            சற்றும் புலப்படவில்லை.

            பிறப்புக்கும் இறப்புக்கும்
            மத்தியில் பிரபஞ்சத்தைப்
            பிடிவாதமாய் சுழல வைக்கிறது

            இது விடுவித்த
            புதிர்களுக்கு விடைதேட முடியவில்லை

     காலத்தை அளந்திடுமா
            காலண்டர் தாள்கள்?
            காலத்தின் ஆழத்தை
            அளக்க முயன்றவர்கள்
            ஆழ மண்ணிற்கு
            அடியில் போனார்களே!

            காலத்தின் முன் காணாமல்
            போனவர்கள்
            உண்டாக்கிய மாயத்தோற்றங்கள்
            மானுடப் பரப்பெங்கும்

           

முகம்



 
என் முகந்தனிலே
முழுசாய் பல முகத்திரைகள்
சொந்த முகந்தனைச்
சொக்கப்பனைக்
கொளுத்தி விட்டுப்
போலி முகங்களைப்
போர்த்தித் திரிகிறேன்
எவரெவர் முகமோ
என் முகமாய் ஆனது
என் முகமோ
எங்கோ போனது.


கேள்வி



எதிரே பார்த்ததும்
ஏனிந்தக் கேள்வி?
இவரைப் பார்த்தால்
இதனைக் கேட்போமென
எவரைப் பார்த்தாலும்
அதே கேள்விகள்!
அச்சிட்ட விண்ணப்பப் படிவம் மாதிரி
அலுக்காத அதே கேள்விகள்
”நல்லா இருக்கீங்களா?”
கேட்க வேண்டுமே
என்பதற்காகக் கேட்டானேயொழிய
உள்ளமொன்றிக் கேட்கவில்லை
அப்படி நானும் கேட்டிருப்பேனே
ஆறெழு சமயங்களில்

சிதலமான சின்ன விரல்கள்



வேனிற்கால வெப்பப் பொழுதுகளில்
இலைகளை இழந்துவிட்டு
மொட்டையாய் முனகுகிற
மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்
மாரடைப்பு வருகிறது
உங்களின்
சின்ன விரல்களைச்
சிதலமாக்கிய
காலன் யார்?

நான்


ஓடம் முழுக்க
ஓட்டைகளோடு
கால கங்கையின்
கடைசிப் பயணியாய்
என்னை இழந்து

என்னுள் இழந்து
எதையோ தேடும்

நான் . . .

விழி . . . எழு . . .



 
இரண்டு சூரியன்களை
இமைக்குள்ளே இருத்திக் கொண்டு
இருளில் இருப்பதாய்
இனியும் சொல்லலாமா?


Sunday 17 February 2013

அணிலாடு முன்றில்


எல்லாவற்றிலும்



 
பியூசான குழல் விளக்கிற்கு
ஒருபடி உப்புத் தந்து
சைக்கிளில் உப்பு வியாபாரம்
செய்துவந்த சந்தைப் பேட்டை
ராசையாவின் பிழைப்பிலும்
பன்னாட்டு உப்பு நிறுவனங்களின்
அயோடின் அலறல் அறிக்கை
மண்ணை அள்ளிப் போட்டது

கீரை விற்கவாவது போகலாமென்று
போனால்
பேரங்காடிகள் அவன் பிழைப்பில்
மண்ணள்ளிப் போட்டான.
பேரங்காடிக் சுவர்களில்
கணினி விலைக் குறியீட்டுடன்தான்
இனி
கீரைகள் விற்கப்பட வேண்டுமாம்.

இவர்கள் புகாத
தொழில் இருந்தால்
சொல்லுங்கள்
அவன்
பட்டினியில் சாவதற்குள்



விரைகின்றன விரல்கள்...



குண்டு குண்டாய்
லட்டு லட்டாய்
கண்ணில் ஒத்திக் கொள்ளும் படியான
எழுத்துக்கள்
மனிதர்களின் காலச்சுவடுகள்

தலைப் பொங்கலுக்குத்
தங்கச்சிக்குச் சீர்தர வேண்டி
ஆண்டி நாடார் பாத்திரக்கடையில் எடுத்த
பித்தளைப் பானையில்
அவளது பெயரைக் கை வெட்டில்
முத்து முத்தாய் எழுதித் தந்த
லோகு அண்ணாச்சியின்
கையழகை அதன் பின்
பல பாத்திரங்களில் எந்திரத்தால்
வெட்டப்பட்ட எழுத்துக்களில் ஏன் இல்லை?

சமாதானபுரச் சிற்பக் கலைக் கூடத்தில்
கைவெட்டால் கல்லெழுத்து எழுதிய அழகை
இன்று
கிரானைட் பலகையின் மீது
இறந்த மனிதரின் படத்துடன்
தரும் கணினித் தொழில் நுட்பத்தால்
ஏன் தர முடியவில்லை?

மின்னஞ்சலும், குறுஞ்செய்திகளும்
எழுத்தின் கழுத்தை
என்றைக்கோ
திருகிப் போட்டுவிட்டன
இப்போது
கோபாலசாமி கோவிலுக்குள் போனால்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
கல்வெட்டுக்களைத் தேடி விரைகின்றன
என் விரல்கள்.

சொல்



 
வந்த தேதியை அறிவிக்கச்
சிலிண்டரில் ஒட்டப்பட்டுள்ள
காலண்டர்தாள் மாதிரி
கண்ணுக்குத் தெரியாத
காலக் காலண்டர்கள்
ஒட்டப்பட்டுள்ளதா
நம் முகத்தில்?


தாழ்பாளற்ற நாட்கள்




 
விடியும் போதே வெறுப்பாயிருந்தது
மின்சாரமற்ற மின்விசிறி மேலே...
வியர்வையால்
பொது பொதுத்தத் தலையணை கீழே..

என்றைக்கும் இருக்கிற நாளாய்
இன்றைக்கும் இருக்கத்தான் வேண்டுமா?

புத்திசாலித் தனங்களைப்
புறந்தள்ளிய புதிய நாளை...
தொழுத கைக்குள்ளும் மறைந்திருக்கிற
குறுவாள்களைத் துப்பறிந்து தரும்
கண்களற்ற இனிய நாளை
வாகனங்களை முந்தி
தலை தெறிக்க அலுவலகம் ஓடாத ஓய்வு நாளை
டையது கட்டிப் பொய்யது பேசி
மெய்யதைத் தொலைக்காத தூய நாளை நோக்கிச்
சிறகுகள் பூட்டிய வண்ணத்துப் பூச்சி மாதிரிச்
சிந்திக்காமல் பறந்தேன்...
அறிவு இருப்பதையே மறந்தேன்...
இன்று ஒரு வேளை
என்னை எந்திரமாக்காத
ஞாயிற்றுக்கிழமையாக இருக்கலாம்..
இன்று, தாழ்பாள்கள் ஏதுமற்றுத்
திறந்து கிடக்கிறது
என் நந்தவன நாள்.



தன் வரலாறு




ஆறு தன் வரலாறு கூறுவதாக
ஆறாம் வகுப்பில்
கட்டுரை எழுதியதோடு சரி
அதன் பிறகு
எந்த வரலாற்றையும்
நான் எழுதவில்லை.

அவரவர் வாழ்க்கையை
அவரவர் வார்த்தைகளில்
சொல்லுங்கள் என்பார்
வண்ணதாசன்

நான் சொல்லத் தொடங்கியுள்ளேன்
இலக்கியமா?
இல்லையா?
என்ற தர்க்க
வினாக்கள் ஏதுமற்று.

தாழ்பாளற்ற நாட்கள்

விடியும் போதே வெறுப்பாயிருந்தது
மின்சாரமற்ற மின்விசிறி மேலே...
வியர்வையால்
பொது பொதுத்தத் தலையணை கீழே..

என்றைக்கும் இருக்கிற நாளாய்
இன்றைக்கும் இருக்கத்தான் வேண்டுமா?
 
புத்திசாலித் தனங்களைப்
புறந்தள்ளிய புதிய நாளை...
தொழுத கைக்குள்ளும் மறைந்திருக்கிற
குறுவாள்களைத் துப்பறிந்து தரும்
கண்களற்ற இனிய நாளை
வாகனங்களை முந்தி
தலை தெறிக்க அலுவலகம் ஓடாத ஓய்வு நாளை
டையது கட்டிப் பொய்யது பேசி
மெய்யதைத் தொலைக்காத தூய நாளை நோக்கிச்
சிறகுகள் பூட்டிய வண்ணத்துப் பூச்சி மாதிரிச்
சிந்திக்காமல் பறந்தேன்...
அறிவு இருப்பதையே மறந்தேன்...
இன்று ஒரு வேளை
என்னை எந்திரமாக்காத
ஞாயிற்றுக்கிழமையாக இருக்கலாம்..
இன்று, தாழ்பாள்கள் ஏதுமற்றுத்
திறந்து கிடக்கிறது
என்

அணிலாடு முன்றில்




 
மலையான் ஊரணிக்கருகேயிருக்கும்
நாகி ஆச்சி வீட்டு முற்றத்தில்
கொய்யா மரமுண்டு...
அதில் கொய்யா
கொய்யாக் கனியுண்டு

கல்முகப்பிலமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வழுவழுப்பான மரத்திலிருந்து
அங்குமிங்கும் பார்த்தபடி
அணில் அந்த முற்றத்தில் இறங்குகிறது

பட்டுக் குஞ்சலத்தையொத்த அழகு வால்
முன்னிரு கரங்கள் ஏந்தி
முன்னிருக்கும்
பழத்தைக் கொறிக்கிறது
அவ்வப்போது
அங்குமிங்கும் மிரட்சிப் பார்வை வீசுகிறது

தடவிக் கொடுப்பதற்கு
இராமர்களுக்குப் பஞ்சமோ என்னவோ
நம் பக்கத்தில் வரவே பயப்படுகிறது

ஆச்சியின் அழைப்பிற்குத் திரும்பினேன்
பூனையின் வாயில்
அணில் மாட்டித் துடித்தது.

அதன்பின்பு
அணிலாடா அந்த
முன்றிலுக்குப் போக
மனமில்லை






சாப்பாடு



 
திருப்பிப் போடப்பட்டுச்
சுடப்படும்
தோசை போல்
வாழ்க்கை
திரும்பத்திரும்பச் சுடுகிறது

சாவு சாப்பிடும் வரை