Saturday 27 July 2013

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழா




தற்செயல் நிகழ்வுகள் கல்வெட்டுக்களாய் மனதில் பதிந்து விடுவதுண்டு.அன்றும் அப்படித்தான் நடந்தது.எங்கள் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக் அவர்கள் தொலைபேசியில் கேட்டுக் கொண்டபடி திருநெல்வேலி ஆரியாஸ் உணவகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்றேன்.மிகப் பெரிய அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது.முன்னர் அமரச்சொல்லி நீதிமன்றக் கிளையின் மேலாளர் திரு.நாகூர்மீரான் கேட்டுக் கொண்டார்.முதல் வரிசையில் சிங்கம் போன்று அமர்ந்திருந்தது என் ஆசிரியர் திரு.பர்னபாஸ் அவர்கள்.சில நேரங்களில் சிலரைச் சந்திப்பதற்காகவே சில கணங்களைக் காலம் நிறுத்தி வைக்கிறது.நான் எண்பதுகளில் பாளை.தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவனாக அடிஎடுத்து வைத்ததும் சகவகுப்புத் தோழராக இன்று இசையமைப்பாளராகத் திகழும் விஜய் ஆண்டனி அங்கே வந்து சேர்ந்தார்.தேசிய மாணவர் படையில் சேர வேண்டும் என்ற ஆவல் தோன்றக் காரணம் ஆசிரியர் திரு.பர்னபாஸ் அவர்களின் ஆறடி உயர கம்பீரஉருவம்,தெளிவான அழுத்தமான தமிழ் உச்சரிப்பு,இன் செய்து முழுக்கை சட்டை போட்டு கைகளைப் பின்னால் கட்டியபடி அவர் பள்ளி வளாகத்தில் வந்துநின்றால் நாங்கள் பயந்து ஓடியதுண்டு. தேசிய மாணவர் படையில் நான் சேரக்காரணமும் அவர்தான்.என்.சி.சி.சீருடையில் காலை இளம்வெயிலில் அவரைப் பார்ப்பது அழகாக இருக்கும்.பாரதி மீசை,மேல் நோக்கி சீவிய தலைக்கேசம்.பரடுக்கு தாமதமாய் வந்தால் அலுமினியப் பூண்போட்ட கம்பால் மிரட்டுவாரே அன்றி யாரையும் அடித்ததில்லை.சத்தமான குரலை எழுப்பி என்.சி.சி ஆணைகளை அவர் பிறப்பிக்கும் கம்பீரத்தை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். காக்கி சீருடை கசங்கி இருந்தால் அவர் கண்கள் சிவக்கும்.புளி மூட்டையில் வச்சீருந்தையா? என்று அவர் கேட்டு முடிப்பதற்குள் என் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் வழியும்.இரக்கப்பட்டு போடே என்பார்.ஒவ்வொரு மாணவனாய் உற்றுக் கவனிப்பார்.மணல் மூட்டையை அடுக்கி தூப்பாக்கிசுடும் பயிற்சிக்காக எங்களை சேவியர் கல்லூரி மைதானத்திற்கு அன்று அழைத்துச் சென்றிருந்தார்.ஒரு வாரம் பயிற்சி வேறு அளித்திருந்தார்.நிகழ்வுகள் முடிந்து நான் சுட்ட இலக்கு அட்டையைக் கொண்டு வரச்சொல்லிப் பார்த்தார்.என் இலக்கு அட்டையில் ஒரு குண்டுகூடப் பாயவில்லை.பக்கத்து மாணவனின் இலக்கு அட்டையில் குறிதவறாமல் சுட்டிருந்தேன்.இனிமேல் என்.சி.சி பக்கம் வந்தே நடப்பதே வேறு என்று விரட்டி வீட்டார்.அந்த ஆசானை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து திருநெல்வேலி ஆரியாஸ் உணவகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடத்திய விருது வழங்கும் விழாவில் சந்திக்க வைத்தது வாழ்வில் மறக்க இயலாத தருணம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த வாடிக்கையாளர் விருதினை என் ஆசான் திரு.பர்னபாஸ் அவர்கள் பெற அவருக்கு அடுத்து கல்லூரியின் சார்பில் அதே மேடையில் என் ஆசிரியப் பெருந்தகை முன்னிலையில் அப்பரிசினை நான் பெறக்காரணமாய் அமைந்த நீதிமன்றக் கிளை மேலாளர் திரு.நாகூர்மீரான் அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்.எழுபத்தைந்து வயதிலும் அதே முறுக்குமீசை அதே நிமிர்ந்த நன்னடை..என்ஆசானே நீங்கள் எப்போதும் முன்மாதிரி.படத்தில் அவர் முன்வரிசையில் அமர நான் அவருக்குப் பின்னால்.. என்றும் அவர் பின்னால்...

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

No comments:

Post a Comment